Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

என் மனம் வேதனையில் இருந்தாலும் தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வரும்

மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு. நிதின் கட்கரி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட சுசீந்திரம் பாலத்தை திறந்து வைத்ததோடு ரூ.50,000 கோடிக்கும் மேலாக புதிய பாலம், மேம்பாலம், சாலை அமைத்தல், சாலை மேம்படுத்துதல் போன்ற புதிய திட்டங்களை தமிழகத்திற்கு அறிவித்தார்கள்.

 

தமிழகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் அளப்பரிய பற்று கொண்டு பல ஆயிரம் கணக்கான கோடி ரூபாய்க்கான திட்டங்களை வாரி வழங்கிடும் நமது பிரதமர் திரு. மோடி அவர்களுக்கும், மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

நான் முன்னர் அமைச்சராக பொறுப்பெடுத்து கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி உட்பட  ஏராளமான திட்டங்களுக்கு இதற்கு முன்பாக அடிக்கல் நாட்டியிருக்கிறேன். ஆனால், நான் கொண்டுவந்த எந்த ஒரு திட்டத்தையும் நான் இருந்து திறந்து வைக்கும் வாய்ப்பினை பெற்றதே இல்லை. முதல் முறையாக சுசீந்திரம் பாலத்தை திறந்து வைக்கும் மன நிறைவான ஒரு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.

 

இருப்பினும் இந்த நல்ல நாளிலும் கூட என் மனம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் வறட்சி, அதனால் ஏற்பட்ட பலவித பாதிப்புகள் ஒருபுறத்தில் மன வருத்தத்தை தந்துகொண்டிருக்கிறது.

 

தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவும், கலாச்சாரத்தின் முக்கிய பங்காகவும், தமிழர்களின் வீரத்தை வெளிக் காட்டுவதாகவும் அமைந்துள்ள  பல்லாயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த  ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த உச்சநீதி மன்றம் தடை செய்திருக்கிறது.

 

இந்த தடைக்கு மாற்றாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டினை நடத்த வேண்டும் என்ற உள்ளார்ந்த சிந்தனையுடன் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசு 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி காளையை காட்சிப்பொருள் பட்டியலில் இருந்து நீக்கி தமிழரின் வயிற்றில் பால் வார்த்தார்கள்.

 

பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசின் இந்த செயலை ஒட்டு மொத்த தமிழர்களும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

ஆனால் கடந்த கால காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் செய்த மாபெரும் வரலாற்று பிழையின் தாக்கம் மீண்டும் தொடர்ந்தது. பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நமக்காக தந்த ஜல்லிக்கட்டு உரிமைக்கு மீண்டும் 2016 ஜனவரி 11ஆம் தேதி அன்று கெடுமதியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையினைப் பெற்றார்கள்.

 

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டாக அவரின் ஆட்சியின் அங்கமான, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும், எடுத்த அனைத்து முயற்சிகளும் ஒரு நொடியில் அன்று தகர்தெறியப்பட்டது.

 

தோல்வி எனது மனதில் மாபெரும் காயத்தை ஏற்படுத்தினாலும் என் தமிழ் சொந்தங்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதியின் படி  மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்த உரிமை பெற்று தர வேண்டுமென்று என்னுடைய  முயற்சியை தொடர்ந்து வந்தேன். பாரத பிரதமர் திரு. மோடி அவர்களின் அரசு ஜல்லிக்கட்டை நடத்த உரிய திருத்தங்களையும், ஆணைகளையும் பிறப்பிக்க தயாராக உள்ளது என்பது அரசின் அணுகுமுறையை நன்கு உணர்ந்த அனைவரும்  அறிந்திருக்கிறார்கள். அனால் அப்படி ஒரு திருத்தும் கொண்டு வரப்பெற்று அவையும் நீதிமன்ற தடைக்கு ஆளானால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழர்கள் விளையாடிவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான முடிவு காலம் ஒட்டுமொத்தமாக வந்துவிடும் என்ற அச்சம் விவரம் அறிந்த அத்தனை பேருக்கும் தெரிந்துள்ளது.

 

இந்த நிலையை உச்சநீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கு தமிழர் தரப்பு நியாயங்களை பல்வேறு கோணங்களில் எடுத்து வைத்து தமிழர்களின் வீர விளையாட்டை விளையாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிட வேண்டி பாரத பிரதமர் திரு. மோடி அவர்கள் அரசு வழக்கறிஞர் மிக தெளிவாக ஆழமான கருத்துக்களை எடுத்து வைத்தார்.

 

வழக்கு இதற்கு முன்பாக நடந்த வழிமுறைகளை நான் தெரிந்திருந்தாலும் தற்போது வழக்கை  கடைசி நிலையில் சிறப்பாக நடந்த விதத்தை தெரிந்திருந்தாலும் சர்வ நிச்சயமாக பொங்கல் பண்டிகைக்குள் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துவிடுமென நம்பி தமிழக மக்களிடம் என் ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுடன் இப்பொங்கல் நன்னாளாக கொண்டாட முடியும் என்று இன்று மாலை வரை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் இன்று இரவு  வரை நீதிமன்றத்தால் தீர்ப்பு  வழங்கப்படவில்லை.

 

ஆகையால் உரிமையோடு ஜல்லிக்கட்டு நடத்தும் நிலை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. இது என்னுடைய மனதை மிகவும் வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.

 

எங்கள் துறை சார்ந்த அமைப்புக்களின் இன்றைய நிகழ்வுகள் ஒரு புறத்தில் இருந்தாலும் நான் கொடுத்த நம்பிக்கையையும், வாக்குறுதியையும் நிறைவேற்ற இயலவில்லை என்கின்ற நிலை என்னை வேதனை அடைய செய்து தலை குனிய வைத்துள்ளது. இதற்க்காக என் தமிழ் சொந்தங்களிடம் நான் பகிரங்க மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.

 

தமிழகத்தின் வறட்சி நிலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டை நடத்த முடியாத நிலை இவற்றை மனதில் கொண்டு பொங்கல் திருநாளை இந்த ஆண்டு நான் கொண்டாடுவது இல்லை என்ற நிலையை எடுத்துள்ளேன்.

 

மேலும் வறட்சி பாதித்த விவசாயிகளின் நலனுக்காக எனது பாராளுமன்ற உறுப்பினருக்கான ஒரு மாத சம்பளம் மற்றும் அணைத்து படிகளையும் சேர்த்து சுமார் 1.5 லட்சம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்துள்ளேன்.

 

என் மனம் வேதனையில் இருந்தாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும், இவ்வாண்டு ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்கின்ற நம்பிக்கை இன்னும் அறுந்துவிடவில்லை. தொடர்ந்து ஜல்லிக்கட்டை  நடத்த வேண்டி அனைத்து முயற்சிகளையும் நான் உறுதியாக எடுப்பேன். காரணம் நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தமிழ் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத பற்றும், பாசமும் நமக்கு பக்க பலமாக உள்ளன

 

சிதைவில்லாத நிலையில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நமக்கு மீண்டும் பெற்று தரும் அனைத்து முயற்சிகளுக்கும் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசு துணை நிற்கும் என்கின்ற நம்பிக்கை இன்றும் எனக்கு உள்ளது.

 

நன்றி!

– திரு. பொன். இராதாகிருஷ்ணன்

மாண்புமிகு மத்திய நெடுஞ்சாலை, சாலைப்போக்குவரத்து மற்றும் கப்பல்துறை இணையமைச்சர்